பயண திட்டமிடல்கள் சில நாட்களாக நடந்துக்கொண்டு தான் இருந்தது.
சென்ற முறை பாலாற்றின் கரையோரம் பயணத்தில் இருக்கும்பொழுதே திருக்கழுகுன்றத்தை பார்த்துவிட
தோன்றியது. அதனால் இம்முறை திருக்கழுக்குன்றம் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால்
உண்மையில் இதற்கு முன்னர் செஞ்சி கோட்டையை தான் காணவேண்டும் என வெள்ளி வரை நினைத்திருந்தேன்.
தற்செயலாக செஞ்சியை பற்றி நண்பர் ஒருவரின் கட்டூரையை படிக்க நேர்ந்தது. அப்பொழுது அங்கு
குரங்கு கூட்டம் அதிகமாக இருக்கும் – அவை சாதாரண குரங்கல்ல ஆக்ரோஷம் நிறைந்தது என்று
அவர் எழுதியிருந்தார். ஒருமுறை எச்சிலை விழுங்கிக்கொண்டேன்.
சென்ற முறை என்னோடு பயணித்த பிரவீனும் மாத கடைசி என்று சொல்லி
நழுவிக்கொள்ள, பல நாட்களாக எதிர்பார்த்திருந்த நவீனும் சென்னை வரமுடியாமல் போக – வேறு
வழியின்றி நான் ப்ளான் பி ஆக வைத்திருந்த திருக்கழுகுன்றம் நோக்கி பயணிக்க முடிவு செய்தேன்.
திருக்கழுகுன்றம். சிவகாமியின் சபதம் படித்ததில் இருந்தே இந்த
ஊரில் மீது ஒரு ஈர்ப்பு. வாதாபியை தீயில் பொசுக்க நரசிம்மனின் சைன்யம் இங்கிருந்து
தான் தொடங்கியதாக அதில் கல்கி குறிப்பிட்டிருப்பார். அந்த சைன்யத்தை அவர் விவரிக்கும்
விதம் – அதிலும் அந்த சைன்யம் மூன்றில் ஒரு பங்கு தான் என்று சொல்வது பிரமிப்பை ஏற்படுத்தும்.
இது தவிர்த்து பல்லவ சாம்ராஜ்யம் மட்டுமல்லாது சோழ சாம்ராஜ்யத்திலும்
நல்ல வரலாற்று சான்றுகள் கொண்ட ஒரு ஊரை பார்க்க போகிறோம் என்னும் எண்ணம் தொற்றிக்கொண்டது.
இரவு மூன்று மணி வரை தூங்கமுடியவில்லை. காலை 6.30 மணிப்போல வீட்டை விட்டு கிளம்பினேன்.
தாம்பரம் அடையும்பொழுது என்னைப்போலவே சில பைக்கர்கள் கூட்டமாக
வந்தார்கள். பைக்கர்களுக்கே உரிய சமிஞ்சைகளை செய்துக்கொண்டு அவர்கள் பயணித்த விதம்
அழகாக இருந்தது. நானும் அந்த கூட்டத்தை சேர்ந்தவன் என நினைத்துக்கொண்டு ஒரு பைக்கர்
என்னை பார்த்து ‘கமான்.. வேகமாக’ என்றார். நான் சோலோ ரைடர் என கைவிரல்களால் சைகை செய்ததை
அவர் புரிந்துக்கொண்டு கையை உயர்த்தி பைக்கர்களுக்கே உரிய விதத்தில் சலாம் வைத்தார்.
வண்டலூர் சாலை வரை கிட்டதட்ட அவர்கள் குழு போலவே ஒன்றாக தான் சென்றோம். கேளம்பாக்கம்
சாலையில் நான் திரும்பும் பொழுது அவரிடம் மீண்டும் சைகை காண்பித்தேன். அவர் மீண்டும்
சலாம் வைத்தார். அதன் பின் என் உலகம்.
சமீபத்திய ‘வர்தா’ புயலின் கோரத்தில் மரங்கள் சாய்ந்து கிடந்தன.
ஒடிந்து கிடந்த மரத்தின் இடையில் பனி சூழந்துகிடக்க ஏதோ காட்டுபகுதியில் தான் நுழைந்துவிட்டோமோ
என்னும் பிம்பத்தை கொடுத்தது. நான் வீட்டிலிருந்து கிளம்பும்பொழுதே மேலே ஒரு சுவட்டர்,
அதற்கு மேல் ஒரு ஜர்கின் என போடும்பொழுது அம்மா சிரித்தார். நல்ல வேலை அவர் சிரிப்பிற்கு
பதிலாக நான் வீட்டிலே கழட்டிவிட்டு வந்திருந்தால் இந்நேரம் விரைத்து போயிருப்பேன்.
வழக்கமாகவே பொறுமையாக வண்டி ஓட்டும் நான் இன்னும் அந்த இயற்கையை
ரசித்துக்கொண்டு பொறுமையாக வண்டியை ஓட்டினேன். அடுத்து OMR சாலை. மாமல்லபுரம் பிரிவில்
ஒரு வலது ஒடித்து செங்கல்பட்டு சாலையை நெருங்கி பயணித்தேன். இம்முறை வழிக்கு செல்ஃபோன்
கிடையாது என்று முன்னமே முடிவு செய்திருந்தேன். வழிதடத்தை படம் பிடித்து பேப்பரில்
அச்சிட்டு வைத்திருந்தேன். அங்கங்கே வண்டியை நிறுத்தி அந்த பேப்பரில் பாயிண்டுகளை குறித்துக்கொண்டே
வந்தேன். ஏனென்றால் நான் முதலில் செல்ல வேண்டியது திருக்கழுக்குன்றம் இல்லை. அதற்கு
பக்கத்திலிருக்கும் ஒரகடம்.
திருக்கழுகுன்றம் நெருங்குமுன்னே ஒரு வலது திரும்ப வேண்டும்.
இடது பக்கம் முழுதாய் மலைகளை ஆக்கிரமிக்க – அந்த மலை உச்சியில் இன்னும் பனி அலங்கரிக்க
அதை ரசித்துக்கொண்டே சென்றேன். கொஞ்சம் தொலைவு சென்றதும் ஒரு சிறு பலகையில் ஒரகடம்
என்னும் போர்டு வலது பக்கம் காட்டி நின்றது. அது ஒரு குறுகலான பாதை. திருப்பி வண்டியை
ஓட்டினேன். அடர் மரங்கள். நடுவில் என் வண்டி. தேய்ந்து போன ஒரு போர்டில் – காட்டு பகுதி என்னும் குறிப்பை பார்த்தேன்.
பக்கத்திலிருக்கும் மரத்தை விலக்கி பார்க்கையில் வலது பக்கம் பிரம்மாண்ட மலைகள் நின்றுக்கொண்டிருந்தன.
ரம்மியம். அழகு. அதைவிட ஒரு அழகு சொல்வதற்கில்லை என்னும் போக்கில் அங்கிருந்து வண்டியை
எடுத்துக்கொண்டு இன்னும் வந்தேன். அங்கே சில மரங்கள் விழுந்திருந்தன. ‘வர்தா..’ இருக்கலாம்
என நினைத்துக்கொண்டே இன்னும் சென்றேன். ஒரு சிறிய கிராமம் தோன்றியது. அங்கிருந்தே எனக்கு
தூரமாக மலை மேல் ஒரு கோவில் தெரிந்தது. அதன் மேல் ஒரு கண்ணை வைத்து திருப்பத்தையெல்லாம்
கடந்து அங்கு சென்றேன்.
ஒரு ஐம்பது படிகள் இருக்ககூடும். செங்குத்தாக அல்லாது படர்ந்த
மலையாக இருந்தது. அந்த கிராமத்தின் நடுவில் அழகான ஒரு குன்று கோவில். மேலே ஏறி நின்று
பார்க்கும்பொழுது சுற்று வட்டாரங்களின் அழகிய பசுமை பார்வை கிடைத்தது. உள்ளே சென்றேன்.
முன்னவே வரலாறு.காம்’இல் இந்த கோவிலை பற்றி படித்திருக்கிறேன். இந்த பகுதிக்கு பல்லவ
மல்ல சதுர்வேத மங்கலம் என்னும் பெயர் உண்டு. இந்த மலையின் தென்மேற்கு பகுதியில் இரண்டு
கல்வெட்டுகள் இருப்பதாய் அதே வரலாறு.காம்’இல் சொல்லப்பட்டது.
’திருக்கோயில் விமானத்தில் கல்வெட்டுக்கள் எதையும் காணமுடியவில்லை.
ஆனால் கோயில் அமைந்துள்ள குன்றின் தென்மேற்குப் பகுதியில் இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுவதை
லாங்ஹர்ஸ்ட் குறிப்பிட்டுள்ளார். ஒன்று இராஜகேசரிவர்மருடையது. இரண்டாவது முதலாம் இராஜேந்திர
சோழருடையது. இரண்டாவது கல்வெட்டில் உரோகடம் என்கிற பல்லவமல்ல சதுர்வேதி மங்கலத்தில்
அமைந்துள்ள திருவாடாமலையார் திருக்கோயிலுக்கு நொந்தா விளக்கெரிக்க ஆடுகள் சில நிவந்தமாகக்
கொடுக்கப்பட்ட தகவல் உள்ளது.’
வரலாறு.காம்’இல் இருந்து. (http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1301)
இது பல்லவ சிறப்பு மற்றுமல்ல. சோழ சிறப்பு. எம் மன்னன் இராசேந்திர
சோழன் காலத்தில் கொடை குறிப்பும் இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து
எழும்பி நிற்கும் ஒரு கலை பொக்கிஷம். நம்மின் அடையாளம். வாடாமல்லீஸ்வரர் கோவில். சுற்றி
இருக்கும் பாறை மலைகளுக்கு நடுவில் அழகின் எடுத்துக்காட்டு இந்த கோவில்.
அந்த அழகு பத்தாது என்று அந்த குன்றின் நேர் எதிரே ஒரு அழகான
பெரிய ஏரி ஒன்று இருந்தது. ஊருக்கு ஒரு ஏரியும் அல்ல குளம். ஒரு கோவிலும். பல்லவனோ
சோழனோ ஆண்ட விதம் நாம் என்றும் மீண்டும் கொள்ள முடியாத ஒரு பொக்கிஷ காலங்கள்.
அங்கிருந்து பிரிய மனம் ஒட்டாது கிளம்பி அங்கிருந்து ஒரு இரண்டு
தெரு தள்ளிய கோதண்ட ராமன் கோவிலுக்கு சென்றேன். பிற்கால பல்லவ பேரரசின் ஒரு திருப்பமான
இரண்டாம் பரமேஸ்வரவர்மன் எழுப்பிய கோவில் என்று அறிந்திருந்தேன். பிற்கால பல்லவர்களாக
நாம் அறியப்படும் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் எல்லோரும் சிம்மவிஷ்ணு என்னும் மாமமன்னன்
வழி வந்தவர்களே. அவ்வழி வந்தவனே இந்த இரண்டாம் பரமேஸ்வரவர்மன். சாளுக்கியர்களை எதிர்த்து
போர் செய்து சந்ததி இல்லாமல் இறந்து போனான் இம்மன்னன். அதன் பிறகு மீண்டும் பல்லவ வம்சம்
உயர்ந்து நின்றது நந்திவர்மனால். அந்த நந்திவர்மன் ஆட்சிக்கு வந்து சுவாரஸ்யத்தை இன்னொரு
நாள் பார்க்கலாம். இப்படி சிம்மவிஷ்ணுவின் வழிவந்த கடைசி மன்னனான பரமேஸ்வரவர்மனின்
கோவில் இது என்று கேட்ட போது உடல் ரோமங்கள் சிலிர்த்துக்கொண்டன.
பரமேஸ்வரவர்மன் தோற்றிறிருந்தாலும் அவன் மேல் எனக்கு ஒரு தீராத
மரியாதை உண்டு. விகடனில் இருந்த காலத்தில் கோவில்களை பற்றி நிறைய எழுதி வந்தேன். அப்பொழுது
நான் கட்டிட கலையிலும், அழகிலும் மெய் மறந்து நின்ற ஒரு கலை பொக்கிஷம் இருக்கிறது.
அது தான் காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவில். எனக்கு கோவில்கள் மீது தீராத காதல் வர காரணமாகி
இருந்த அடித்தளம் இந்த கோவில். அந்த கோவிலை எழுப்பியவனும் இதே இரண்டாம் பரமேஸ்வரவர்மன்
தான்.
சரி…! வைகுண்டனை விடுவோம். நாம் கோதண்டனை பார்ப்போம். கோவில்
திறந்திருந்தது. ஆனால் சந்நதி திறந்திருக்கவில்லை. சிறிது நேரம் காத்திருந்தேன். ஆனால்
யாரும் இல்லா காரணத்தால் கிளம்ப வேண்டிய சூழல். இருப்பினும் சுற்றி அந்த கோவிலை ரசித்துவிட்டு
கிளம்பினேன்.
திருக்கழுக்குன்றம்
மீண்டும் அந்த காட்டுப்பகுதி ரைட் கடந்து திருக்கழுகுன்றத்தில்
நின்றேன். வேதகிரீஸ்வரர் கோவில். பிரம்மாண்டமான அந்த கோவில் நமக்கு இது பழைய கால சிட்டிடா
என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறது. ஆம் அந்த காலத்தில் திருக்கழுக்குன்றம் பெரிய நகரமாக
இருந்திருக்க வேண்டும். அந்த பிரம்மாண்டமான கோவில் மூலவர் பக்தவச்சலேஸ்வரர், அங்கிருக்கும்
மலை மேல் இருப்பவர் வேதகிரீஸ்வரராக அறியப்படுகிறார். பல்லவனில் மிகச்சிறப்பு வாய்ந்த
மன்னனான முதலாம் மகேந்திர பல்லவன் எழுப்பிய கோவில் இது.
பல சிற்ப கலைகளும், பிரம்மாண்டங்களும் நிறைந்திருந்தன. விசித்திரமாய்
சிவன் சந்நிதி முன்பு வழமையாக காணப்படும் நந்தி அங்கு அமையப்படவில்லை. அந்த பிரம்மாண்டமான
கோவிலை சுற்றிவிட்டு வரும்பொழுது இந்த கோவிலை பற்றிய ஒரு சிறப்பு படித்ததாய் ஞாபகம்
உண்டு. இந்த கோவிலின் மேற்கு பகுதியில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. கடலில் கிடைக்ககூடிய
வலம்புரி சங்கு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த குளத்தில் கிடைப்பதாய் சொல்லப்படுகிறது.
சங்கு தோன்றும் முதல் நாள் குளம் நுறைக்கொள்ளும் – பூஜை செய்பவர்கள் அது தோன்ற காத்துகிடப்பார்கள்.
சங்கு தோன்றியவுடன் பழைய சங்கை ஆபரண அறையில் வைத்துவிட்டு இந்த சங்கை வைத்து பூஜை செய்வார்கள்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த குளத்தை ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து
கிளம்பினேன்.
மலை மேல் இருக்கும் வேதகிரீஸ்வரரை பார்த்துவிட்டு செல்லலாம்
என முடவெடுத்து அந்த மலை மேல் ஏற ஆரம்பித்தேன். மலை ஏற ஒருவருக்கு டிக்கெட் 2 ரூபாய்.
இங்கு கார்டு தேய்க்கும் வசதி இல்லை. மோடி கவனித்துக்கொள்ளலாம். மேல் மருவத்தூர் மாலை
போட்ட பல பெண்கள் அங்கும் இங்கும் மூச்சிரைக்க உட்கார்ந்திருந்தனர். செங்குத்தாக இருந்தன
மலைகள். நான் மெல்ல மேலே ஏற ஆரம்பித்தேன். இன்னும் நீண்டுக்கொண்டே போகின. அங்கங்கு
நின்று ஓய்வெடுத்து மெதுவாக மேலே ஏற 560 படிகளுக்கு அப்பால் அழகான அந்த கோவிலும், அந்த
பிரம்மாண்டமான ஊரும் கண்ணில் பட்டது. இந்த அழகை காண வருவது தவறல்ல. தவறே இல்லை என்று
மனம் படபடவென அடித்துக்கொண்டது. சிரித்துகொண்டே அருகில் சென்ற எனக்கு ஒரு ‘பக்…’. குரங்குகள்.
எதற்காக நான் செஞ்சியை ஒதுக்கிவைத்தேனோ.. அந்த குரங்குகள். பின்னால் இருந்த பையை ஒரு
முறை இறுக பிடித்துக்கொண்டேன். கையில் வேறு குச்சி எடுத்துவரவில்லையே என்று மனம் அடித்துக்கொண்டது.
நெருங்கி வந்த குரங்குகளை பையை காண்பித்து விரட்டிவிட்டேன்.
இந்த குன்றில் மேல் தினமும் இரண்டு கழுகுகள் வந்து ஈசனை தரிசிக்கும்
வழமை கொண்டிருக்கின்றன. கழுகுகள் அழிந்து வரும் இந்த காலத்தில் என்னால் அந்த கழுகுகளை
இப்பொழுது காண முடியவில்லை. ஆனால் சுற்றியிருந்த சிலர் கொஞ்ச நாள் முன்னர் வரை கூட
கழுகுகள் இங்கு வருவதை வழமையாக கொண்டிருந்தனவாம் – படைத்து முடித்த உணவை உண்டுவிட்டு
செல்லுமாம் என்று சொல்லிக்கொண்டார்கள்.
ஒரு வழியாக கோவில் உள்ளே சென்று பார்த்துவிட்டு மீண்டும் அந்த
மலையின் அழகை ரசிப்பதற்குள் குரங்குகள்…!!! படம் எடுக்க முடியவில்லை. அங்கு நின்றும்
பார்க்க முடியவில்லை. ஒருவேலை அவர்கள் இடத்தை நான் ஆக்கிரமிக்க நினைத்துவிட்டதுகளா
என்று தெரியவில்லை. கடிந்துக்கொண்டே இறங்கிவிட்டேன்.
பொன் விளைந்த களத்தூர்
காலை சாப்பிடாமல் மலை ஏறியது பெரிய பிசகாகி போனது. கால் நடுக்கம்
ஏற்பட்டுவிட்டது. கீழே இறங்கியவுடன் நான்கு இட்லியை திண்றேன். ஒரு டீ. ஒரு வடைகறி.
நாற்பது ரூபாய். இங்கும் கார்டு இல்லை என்று சொல்லிவிட்டார்கள் – மோடியின் கவனத்திற்கு.
அங்கிருந்து கிளம்பி கொஞ்சம் தொலைவிலே ஒரு வலது ஒடித்து அந்த கிராமத்து அழகிய சாலையில்
பயணித்துக்கொண்டிருந்தேன். அங்குமிங்கும் சாலை கொஞ்சம் மோசமாக இருந்தது. திடீரென காட்டுபகுதிக்குள்
நுழைந்தது போல இருந்தது. ஆளே இல்லாது கொஞ்சம் மூங்கில் காட்டையும் கடந்து சென்றுக்கொண்டிருந்தேன்.
பொன் விளைந்த களத்தூரில் முன்குடுமீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தம்.
தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் வரும் கோவில். மூன்றாம் நந்திவர்மன் காலத்திய கோவில்
என்ற குறிப்பு இருக்கிறது. அவன் காலத்திய மணற் கோவிலாய் எழுப்பப்பட்டது பிற்காலத்தில்
இராஜேந்திர சோழன் பெயர் கொள்கிறது. ஏனென்றால் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழமண்டல, களத்தூர் நாட்டு கங்கை கொண்ட சோழ மண்டலம் என்று குறிப்பும் பெறுகிறது.
கிட்டதட்ட முதலாம் இராசேந்திரனுக்கு பிந்திய மன்னர்கள் பலரும் குடை அருளிய
இந்த கோவிலை சுற்றி 21 கல்வெட்டுகள் பல்வேறு மன்னர்களின் குறிப்பை தாங்கி நிற்பதாய்
அறிகிறோம். ஆனால் என் கொடுப்பினை. நான் சென்றிருந்த நேரம் கோவில் பூட்டி கிடந்தது.
உள்ளே செல்ல முடியவில்லை. அதிகாலையிலே இந்த கோவில் பூஜை முடிந்ததும் பூட்டப்பட்டுவிடும்
என்று சொன்னார்கள். அவரை அழைத்து திறந்து காட்ட சொல்லும்படி சொன்னார்கள். நமக்காக கோவில்
திறக்கப்படுவது சரியா என்று மனம் கேட்டது – முன்னமே இது போன்ற சமயங்களில் காத்திருந்து
பார்த்திருக்கிறேன். இங்கு காத்திருந்து பார்ப்பது சாத்தியமில்லை.
அப்படியே அவரை அழைத்து காட்ட சொன்னாலும் அவர் வந்ததிற்காக ஏதேனும் கொடை
அவர் கேட்க கூடும். ஆனால் அவரும் கார்டு தேய்க்கும் வசதி வைத்திருக்கமாட்டார் என்பதால்
அங்கிருந்து கிளம்பிக்கொண்டேன். கோவிலுக்கு கொடை செலுத்த மோடி ஸ்வைப்பிங் மிஷன் கொடுத்தால்
நன்றாக இருக்கும் – மோடி குறிப்பில் கொள்க.
அங்கங்கே உடைந்து கிடந்த தூண்கள் தூரமாக என் கண்ணில் பட்டன. அவை சிதைந்து
போன வரலாற்றை சொல்லிக்கொண்டு கிடந்தன. அங்கு செல்லவேண்டும், அவைகளை தொட்டு தடவி தூக்கி
நிறுத்தவேண்டும் என்று மனம் துடித்தன. விடுவோம்.
இன்று இது தான் என் திட்டமிடல். பல்லவனும், அவன் படைகளும் அவன் பின்னர்
வந்த சோழமும் முக்கியமாய் ஆரவாரித்து கிடந்த ஆயிரம் ஆண்டுகள் மேலதிகமாய் பெருமை வாய்ந்த
ஊர்களை சுற்றி என் புல்லட்டின் தடம் பதிந்த மகிழ்வோடு. அடுத்த பயணத்தை திட்டமிட்டுக்கொண்டே
செங்கல்பட்டு பிறகு GST சாலை வழியாக வீடு வந்து அடைந்தேன்.!!
-மீண்டும் பயணிப்போம்
Comments
Post a Comment