பயண திட்டமிடல்கள் சில நாட்களாக நடந்துக்கொண்டு தான் இருந்தது. சென்ற முறை பாலாற்றின் கரையோரம் பயணத்தில் இருக்கும்பொழுதே திருக்கழுகுன்றத்தை பார்த்துவிட தோன்றியது. அதனால் இம்முறை திருக்கழுக்குன்றம் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் உண்மையில் இதற்கு முன்னர் செஞ்சி கோட்டையை தான் காணவேண்டும் என வெள்ளி வரை நினைத்திருந்தேன். தற்செயலாக செஞ்சியை பற்றி நண்பர் ஒருவரின் கட்டூரையை படிக்க நேர்ந்தது. அப்பொழுது அங்கு குரங்கு கூட்டம் அதிகமாக இருக்கும் – அவை சாதாரண குரங்கல்ல ஆக்ரோஷம் நிறைந்தது என்று அவர் எழுதியிருந்தார். ஒருமுறை எச்சிலை விழுங்கிக்கொண்டேன். சென்ற முறை என்னோடு பயணித்த பிரவீனும் மாத கடைசி என்று சொல்லி நழுவிக்கொள்ள, பல நாட்களாக எதிர்பார்த்திருந்த நவீனும் சென்னை வரமுடியாமல் போக – வேறு வழியின்றி நான் ப்ளான் பி ஆக வைத்திருந்த திருக்கழுகுன்றம் நோக்கி பயணிக்க முடிவு செய்தேன். திருக்கழுகுன்றம். சிவகாமியின் சபதம் படித்ததில் இருந்தே இந்த ஊரில் மீது ஒரு ஈர்ப்பு. வாதாபியை தீயில் பொசுக்க நரசிம்மனின் சைன்யம் இங்கிருந்து தான் தொடங்கியதாக அதில் கல்கி குறிப்பிட்டிருப்பார். அந்த சைன்யத்தை அவர் வ...